சமுதாயத்தில் பணத்தையும், பதவியையும், புகழையும் இலக்காக மனிதன் நிர்ணயித்துக் கொண்டு ஓடிக்கொண்டு இருக்கிறானோ அது போன்றே ஞானத்தையும் இலக்காக்கி விட்டான். ஏனென்றால் இலக்கு இல்லாமல் வாழ்வது என்பது அவனால் முடியாத காரியமாக இருக்கிறது. எதையாவது பற்றிக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கவே மனிதன் விரும்புகிறான். இலக்கு இல்லாத வாழ்வு முட்டாள் தனம் என்று உளருகிறான்.
ஆனால் இயற்கை வாழ்விற்கு எந்த இலக்கும் நிர்னயிக்கவில்லை. அதற்கு வாழ்வது என்பதே போதுமானதாக இருக்கிறது. அல்லது வாழ்வின் இலக்கு வாழ்விலேயே இருக்கிறது. வாழ்வின் ரகசியமும் அதிசயமும் வாழ்விலேயே இருக்கிறது. வாழ்வை விட்டு ஓடியவர்கள் அனைவரும் கடைசியில் புரிந்து கொண்டதும் இதைத்தான்.
ஞானம் என்பது முழுவதும் இயற்கை சம்பந்தப்பட்டது. அது இயற்கையின் உச்ச பட்ச நிலை. படைப்பாற்றலின் ஒருமை நிலை. அது உங்கள் கையில் எபபொழுதுமே இருந்ததில்லை. ஆனால் நீங்கள் நினைத்தால் அதை அடைய முடியும் என்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது. எந்தவித ஆன்மிக சாதனைகளும் இன்றி ஒரே நிமிடத்தில் அதை அடைந்தவர்களும் உண்டு. ஐம்பது அறுபது வருடங்கள் கடுமையான ஆன்மிக சாதனைகள் செய்து அதை அடையாதவர்களே அதிகம்.
ஆனால் அதற்கு உங்களை தயார் படுத்திக்கொள்ள முடியும் இதுவே ஆன்மிக சாதனைகளின் பலன். நீங்கள் செய்யும் அனைத்து ஆன்மிக சாதனைகளும் உங்களை உருமாற்றிக் கொள்ளவே அன்றி ஞானத்திற்கல்ல. ஆனால் ஆன்மிக சாதகர்கள் பெரும்பாலோர் முக்தி பெற முடியும். இதுதான் மீண்டும் பிறவாநிலை என்பது. இதை இயற்கை உங்கள் கையிலும் குருவின் கையிலும் வழங்கி இருக்கிறது. நீங்கள் உங்கள் கர்மாவை உங்களை உணர்தல் மூலமோ அல்லது குருவின் துனையுடனோ இதை நிறுத்தி விட முடியும். அப்படி நிறுத்தி விடும் பொழுது உங்களின் பிறப்பு சுழற்சி நின்று விடும்.
ஞானம் என்பது வேறு. முக்தி என்பது வேறு. ஆனால் இரண்டும் ஒன்றாகவே புரிந்து கொள்ளப்பட்டும் உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டும் கொண்டு இருக்கிறது. ஞானத்தை இயற்கை வழங்குகிறது. முக்தியை குரு வழங்குகிறார். பலருக்கு வழி காட்ட அல்லது பிறவியை கடக்க ஞானம் வழங்கப்படுகிறது. உங்கள் ஒவ்வொருவரின் விடுதலைக்காக முக்தி வழங்கப்படுகிறது.
No comments