இயற்கையின் படைப்பாற்றல் மிகவும் அற்புதமானது. ஒருவன் குழந்தையாக பிறந்து பெரியவனாக வளர்ந்து மீண்டும் குழந்தை தன்மைக்கு திரும்புவதே ஞானம்.
குழந்தைக்கு மனம் வளர்ச்சி அடையவில்லை. சமுதாயத்தால் அறிவு கொடுக்கப்படவில்லை. அதனால் அடுத்த கனம் என்ன நடக்கும் என்று எதையும் எதிர்பாராமல் ஆனந்தமாக இருக்கிறது. இதையே நீங்கள் மனம் வளர்ச்சி அடைந்த பின்னும் சமுதாயத்தால் கொடுக்கப்பட்ட அறிவு செயல்படும் நிலையில் அதை தான்டி அடுத்த கனம் என்ன நடக்கும் என்ற எந்தவித எதிர்பார்ப்பின்றி உங்கள் இருப்பில் இயல்பாக இருக்க தெரிந்தால் இதுவே ஞானம்.
உங்களுக்கு இந்த சமுதாயத்தில் இவ்வளவு வேறுபாடுகளும் முரண்பாடுகளும் இருப்பதே நீங்கள் ஏன் என்ற கேள்வியை கேட்டு உங்களை முழுமையை நோக்கி நகரச்செய்யவே. உங்கள் வாழ்வின் கஷ்டங்களும், நஷ்டங்களும், நெருக்கமானவர்களின் இறப்பும் உங்களின் முழுமைக்கான பயணத்திற்கான உந்துதல்களே.
இந்த பிரபஞ்சம் எப்படி இருக்க வேண்டுமோ, உங்கள் சமுதாயம் எப்படி இருக்க வேண்டுமோ அனைத்தும் சரியாகவே இருக்கிறது. உங்களுக்கு இந்த சமுதாயத்தாலேயே ஆன்மிகம் என்றால் என்ன என்பதும் இறைவன், இயற்கை பற்றிய அறிவும் நான் யார் என்று உணரக்கூடிய அறிவும் கொடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
சமுதாயத்தைக் கடந்து எங்கோ தூரத்தில் ஆன்மிகம் என்ற ஒன்று தனியாக இல்லை. அது உங்கள் வாழ்வின் அடிநாதமாக ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. அதை மையமாக வைத்தே இங்கு அனைத்தும் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
வாழ்வை விட்டு ஆன்மிகத்தை தேடி எங்கும் அலையாதீர்கள். அது வீன்வேலை. அதேபோன்று வாழ்வை மேம்போக்காக அதன் மேல்மட்டத்தில் வாழ்ந்து விடாதீர்கள் அது வாழ்விற்கு எதிரானது. அதன் அடிஆழம் வரை சென்று வாழுங்கள் அப்பொழுது அங்கே ஆன்மிகத்தை உங்களால் கண்டடைய முடியும்.
எப்படி உங்களை உடலாக நீங்கள் நினைத்தால் அது உண்மையில்லையோ அதேபோன்றே இதை உலகவாழ்வாக நினைத்தால் அதுவும் உண்மையில்லை. உங்கள் உடலுக்குப்பின் எப்படி உயிர்தன்மையாக நீங்கள் இருக்கிறீர்களோ அதேபோன்றே இந்த உலக வாழ்விற்கு பின் அதற்கு ஆதார இயக்கமாக இருப்பது ஆன்மிகமே. அதைத் தேடிச்செல்வது என்ற பேச்சிற்கே இடமில்லை. மாற்ற வேண்டியது உங்கள் கண்ணோட்டத்தை மட்டமே
No comments